Blog Single

22 Jan

கூட்டாட்சி மீதான தாக்குதலா புதிய IAS கேடர் விதிமுறைகள்? ஏன் விதிகளை மாற்றுகிறது அரசு?

PM Modi

இந்த மாற்றங்கள், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம் எனவும், மாநில நலனுக்கு எதிராகப் போய் முடியும் எனவும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த மாற்றங்கள் எதற்காக, இது எப்படி மாநிலங்களை பாதிக்கும்?

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையானது (DoPT), கடந்த ஜனவரி 12-ம் தேதி அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறது.

  • இந்திய ஆட்சிப்பணியாளர் விதிகள் (Indian Administrative Service Rules) 1954-ல், பிரிவு 6-ஐ மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்து மாநிலங்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் அதில் கூறியிருக்கிறது.
  • இந்த மாற்றங்கள், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம் எனவும், மாநில நலனுக்கு எதிராகப் போய் முடியும் எனவும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த மாற்றங்கள் எதற்காக, இது எப்படி மாநிலங்களை பாதிக்கும்?

என்ன செய்கிறது மத்திய அரசு?

இதைப் புரிந்துகொள்ளும் முன்பு, IAS, IPS அதிகாரிகளின் பணி நியமனங்கள் குறித்து நாம் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

  • ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் IAS, IPS, IFS உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்வு செய்வது மத்திய அரசின் பொறுப்பு. இப்படி தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் கேடர்கள் வாரியாக (உதாரணம்: தமிழ்நாடு கேடர், குஜராத் கேடர்) வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர்.
  • அதன் பின்னர் அவர்களுக்கான சம்பளம், பதவி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள்தான் பொறுப்பு. அப்படியெனில் மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகள்? மாநில அரசிடமிருந்து, அவர்களின் அனுமதியுடன் மத்திய அரசு சில அதிகாரிகளைப் பெற்றுக்கொள்ளும்.
  • எந்தெந்த அதிகாரிகளை, மத்திய அரசுப் பணிகளுக்கு (Central deputation) அனுப்பலாம் என்பதையும் மாநில அரசுகள்தான் முடிவு செய்யும். ஒருவேளை மத்திய அரசுக்கு குறிப்பிட்ட அதிகாரி தேவைப்படும் பட்சத்தில், அவரை மாநில அரசின் அனுமதியுடன்தான் (With No Objection Certificate) பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது இந்த அனுமதி பெறும் விஷயத்தைத்தான் மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. அதுதொடர்பான கடிதம்தான் மேலே நாம் பார்த்தது.

இந்த மாற்றங்கள் நடந்தால், அதன்பின்பு மத்திய அரசு, மாநிலத்திலிருக்கும் எந்தவொரு குறிப்பிட்ட அதிகாரியையும், மாநிலங்களின் அனுமதியின்றிகூட, மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக்கொள்ள முடியும். ஏன் இப்படி செய்கிறது மத்திய அரசு?

அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

மத்திய அரசில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறைதான் முதல் காரணம். 1998 முதல் 2007-ம் ஆண்டு வரைக்கும் 50-லிருந்து 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்தியாவின் தேவைக்கு இது மிகவும் குறைவு. பின்னர் 2008-க்குப் பிறகுதான் இந்த எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. 2014-க்குப் பிறகு இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 180-ஐத் தொட்டது.

  • இப்படி 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட IAS பற்றாக்குறை, இப்போது மத்திய அரசுக்கு பிரச்னை செய்கிறது. இதைவிட இன்னொரு முக்கியமான சிக்கல், மாநில அரசுகள். ஆம்!
  • ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப்பணிகளுக்கு என மாநிலங்கள் ஒதுக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்களின் கேடரிலிருந்து 40% வரை அதிகாரிகளை மத்திய அரசுப்பணிகளுக்கு அனுப்பலாம். ஆனால், இது பல மாநிலங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது.
  • உதாரணமாக மாநில கேடர்களிலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் IAS அதிகாரிகளின் விகிதம் 2011-ல் 25% ஆக இருந்தது. ஆனால், 2021-ல் இது 18% குறைந்திருக்கிறது.
  • இதேபோல துணைச்செயலாளர் / இயக்குநர் ரேங்க்கில் இருக்கும் IAS அதிகாரிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு 614 ஆக இருந்தது, 2021-ல் 1130 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இதிலிருந்து மத்திய அரசுக்கு வருபவர்களின் எண்ணிக்கையோ 117-லிருந்து 114 ஆக குறைந்திருக்கிறது.

இந்தப் பிரச்னையை சரிசெய்யச்சொல்லியும், அதிகமான அதிகாரிகளை ஒதுக்கும்படியும் கடந்த ஆண்டே மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது மத்திய அரசு. இந்நிலையில்தான், இந்த ஆண்டு புதிதாக விதிகளை மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறது.

மாநிலங்கள் என்ன சொல்கின்றன?

இதுவரைக்கும் மேற்கு வங்கம் மட்டும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கேரளாவும் விரைவில் எதிர்ப்பை பதிவுசெய்ய முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் நிலை இன்னும் தெரியவில்லை. சரி, எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

  • “மத்திய அரசுக்கு அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பது என்னவோ உண்மைதான்; ஆனால், இப்போது மாநில அரசுகளிடமிருந்து வலுக்கட்டாயமாக அதிகாரிகளைப் பிடுங்கினால் மட்டும் பிரச்னை சரியாகிவிடுமா? மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்துவிட்டு, மத்திய அரசின் பிரச்னையையும் தீர்க்கும்படியான ஒரு தீர்வையல்லவா இவர்கள் உருவாக்கவேண்டும்?
  • மத்திய அரசு நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக இருக்கிறதே? ஒரு மாநிலத்தில் சிறப்பாக செயல்படும் அதிகாரியை, அரசியல் உள்நோக்கங்களுடன், மத்திய அரசு அழைத்துக்கொண்டால் (மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்ததைப் போல) அதை யாரால் எப்படி தடுக்கமுடியும்?
  • மேலும் திறமையான, நல்ல அதிகாரிகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டால், அது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காதா? திடீரென மத்திய அரசு கூடுதலான அதிகாரிகளை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், அந்த இடத்தை மாநிலங்கள் எப்படி நிரப்பும்?
  • எந்தவொரு அதிகாரியை வேண்டுமானாலும் இடம்மாற்ற மத்திய அரசிடம் தன்னிச்சையான அதிகாரம் இருக்கும்பட்சத்தில், அதிகாரிகள் மீது மத்திய அரசு நேரடியாக ஆதிக்கம் செலுத்த அது வழிவகுக்காதா?”

இப்படி இந்த முடிவு குறித்து பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், மாநில அரசுகளுக்கு எந்த பாதிப்பும் வராமல், அவர்களுடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவுகளை எடுப்போம் என்கிறது மத்திய அரசு.

அடுத்து என்ன?

ஜனவரி 25-க்குள் அனைத்து மாநிலங்களும், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததும், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. மாநிலங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த அடியை எடுத்துவைக்க முடியும்.

மத்திய, மாநில நிர்வாகங்களில் IAS அதிகாரிகளின் பங்கு மிக அதிகம் என்பதால் இந்த விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

Related Posts

Leave A Comment